சென்னையில் மழையால் தண்ணீர் தேங்கவில்லை என்பது மகிழ்ச்சி - தமிழிசை சவுந்தரராஜன்

கார்காலம் கேள்விப்பட்டுள்ளோம், கார் பாலத்தை இப்போதுதான் பார்க்கிறோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Update: 2024-10-17 05:28 GMT

சென்னை,

சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக பா.ஜனதா சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை அளித்தார்.

இதையடுத்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பா.ஜனதா சார்பாக மழை காலத்தையொட்டி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துகிறோம். பா.ஜனதா தொண்டர்கள் களத்தில் பணியாற்றி வருகிறார்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி கேட்கும் பொதுமக்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம்.

தற்போது, சென்னையில் மழையால் தண்ணீர் தேங்கவில்லை என்பது மகிழ்ச்சி. அதேநேரம், அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு சதவீதம் நிறைவடைந்துள்ளது? ரூ.4 ஆயிரம் கோடியில் எவ்வளவு சதவீதம் செலவாகி உள்ளது? என்ற தகவல்கள் முழுமையாக இல்லை.

வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்தும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க கூடாது என்று கோரிக்கை வைத்தோம். அதன்பிறகு, அபராதம் விதிக்கப்படாது என்றார்கள். ஆனால், தற்போது கார்களை மேம்பாலத்தில் நிறுத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று கூறுகிறார்கள். கார் காலம் கேள்விப்பட்டுள்ளோம், 'கார் பாலம்' என்பதை இப்போதுதான் பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்