அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.;

Update:2025-03-14 13:54 IST
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

கோப்புப்படம் 

சென்னை,

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியபோது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து ரூ.1,000 கோடி மதுபான ஊழல் தொடர்பாகவும்,அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பாகவும் பேச முயன்றனர். சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

ஆனாலும், அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேச வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருந்தனர். இதனால், சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து பேச அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு தரப்படாததால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.பி. உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அவருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உரசல்கள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்