இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2024-12-20 07:29 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பல புகார்களை அனுப்பியுள்ளேன்.

அ.தி.மு.க., உள்கட்சி தொடர்பாக சிவில் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் முடிவுக்கு வரும்வரை இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க, வுக்கு ஒதுக்கக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இந்த மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் ராஜகோபால், மனுதாரரின் மனு தொடர்பாக அ.தி.மு.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அ.தி.மு.க.வும் பதில் அளித்துள்ளது. இதன்படி, மனுதாரர் மனு விரைவில் முடிவு எடுக்கப்படும்'' என்று கூறினர்.

ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன், வக்கீல் சி.திருமாறன் ஆகியோர் ஆஜராகி, "இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் கருத்தை தேர்தல் ஆணையம் இதுவரை கேட்கவில்லை. எனவே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் கருத்தை கேட்ட பிறகே முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், "மனுதாரரின் மனு மீது இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தும்போது, இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது கருத்துக்களை கேட்டு, 4 வாரத்துக்குள் இந்திய தேர்தல் ஆணையம் தகுந்த முடிவை எடுக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பதில் தனக்கு வழங்கப்படாத நிலையில், தனது கருத்துக்களை தெரிவிக்க முடியவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் எட்டு வார கால அவகாசம் வழங்கக் கோரி சூரிய மூர்த்தி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு, தேர்தல் ஆணையம் நான்கு வாரத்தில் மனு மீது முடிவெடுக்கும் என தெரிவித்ததாகவும், நீதிமன்றம் எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்றும் கூறி, மனு மீது முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வழங்க மறுப்பு தெரிவித்து, சூரியமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்