துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திண்டுக்கல் வருகை
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பாதைகளில் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருக்கின்றன.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் இல்லத்திருமண விழா நாளை (திங்கட்கிழமை), நத்தம் அருகே விளாம்பட்டியில் நடைபெறுகிறது. இதில் தமிழக துணை முதல்-அமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
இதற்காக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு திண்டுக்கல்லுக்கு வருகிறார். திண்டுக்கல்லில் தனியார் ஓட்டலில் தங்கும் அவர், நாளை காலையில் புறப்பட்டு நத்தம் விளாம்பட்டிக்கு சென்று திருமண விழாவில் பங்கேற்கிறார். துணை முதல்-அமைச்சராக பதவிஏற்ற பின்னர் அவர், முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு வருகை தர இருப்பதால், உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.
அதன்படி வேடசந்தூர் அய்யர்மடம் பகுதியில் இன்று இரவு, தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான இ.பெரியசாமி தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்பு அளிக்கின்றனர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கும்படி உணவுத்துறை அமைச்சரும், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அர.சக்கரபாணி, கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
மேலும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பாதைகளில் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருக்கின்றன. அதேபோல் சாலைகள் சரிசெய்யப்பட்டு, மின்விளக்குகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.