பெஞ்சல் புயல் எதிரொலி: மின் நுகர்வோர் சேவை மையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

பெஞ்சல் புயலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2024-11-30 16:08 IST

சென்னை,

பெஞ்சல் (FENGAL) புயல்" இன்று (30.11.2024) கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இப்புயலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24X7 செயல்பட்டு வரும் பொது மக்களுக்கான மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் படி "பெஞ்சல் (FENGAL) புயலை" எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்துள்ளது. இதுவரை, மின்சாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லை, மாநிலம் முழுவதும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு முதல் கடுமையான மழை பெய்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புயல் கரையினை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக கனமழையுடன் பலத்த காற்று 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அவ்வாறான பலத்த காற்று வீசும் நேரங்களில் மட்டும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்னூட்டிகளை கை நிறுத்தம் செய்ய அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் செயற்பொறியாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சுமார் 10,000 பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் தயார் நிலையில் உள்ளனர். மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், ஜே.சி.பி., கிரேன்கள் உள்ளிட்ட வாகங்கள் மற்றும் அனைத்து தளவாடப் பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்த அமைச்சர், மின் தடங்கல் ஏதேனும் ஏற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கவும் அறிவுத்தினார்.

இது போன்ற மழைக் காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்கவும் பேரிடர் காலங்களில் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் சீரமைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கு இடம் உட்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் உறுதி செய்தார். அனைத்து அலுவலர்களும் தங்களது அலைபேசியை எந்த காரணம் கொண்டும் ஆப்( OFF) செய்து வைக்கக்கூடாது எனவும், இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார்.

மின் சேவைகள், மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ. மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்