டானா புயல் எச்சரிக்கை : 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

டானா புயல் உருவானதையடுத்து 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Update: 2024-10-23 07:20 GMT

சென்னை,

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவாகியுள்ளது . இந்த புயலுக்கு 'டானா' புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த 'டானா' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஒடிசாவின் பூரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். புயலை எதிர்கொள்ள மேற்கு வங்காள அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த புயலால் பாதிப்பு ஏதும் இல்லை என்று கூறப்படுகிற்து. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "நேற்று கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 'டானா' புயலாக வலுப்பெற்றுள்ளது.

காலை 5:30 மணி நிலவரப்படி, இந்த புயல் பாரதீப்பில் (ஒடிசா) தென்கிழக்கே சுமார் 560 கிமீ தொலைவிலும், சாகர் தீவின் (மேற்கு வங்காளம்) தெற்கு-தென்கிழக்கே 630 கிமீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது. இது நாளை அதிகாலை வடமேற்கு வங்கக் கடலில், வடமேற்கு நோக்கி நகர்ந்து கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடையும். பின்னர் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளக் கடற்கரையை பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இரவு தொடங்கி, அடுத்த நாள் காலை வரை, மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது உருவாகி உள்ள 'டானா புயல்' தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் டானா புயல் உருவாகி உள்ள சூழலில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்