அர்ஜுன் சம்பத் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்
அர்ஜுன் சம்பத் மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக நக்கீரன் கோபாலை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் 27-ந் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி பேசும்போது, நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி தி.மு.க.வைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல்ஜலீல் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் ஓம்கார் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து ஜாமீன்கோரி ஓம்கார் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓம்கார் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, தினமும் காலை 10.30 மணிக்கு கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.