கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் ஊழியர்கள் கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 தனியார் நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.;
திண்டிவனம்,
திண்டிவனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வரும் 23 வயது மாணவி பகுதிநேர வேலைக்காக ஒலக்கூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் விண்ணப்பித்திருந்தார். அந்த மனுவில் மாணவி தன்னுடைய செல் நம்பரை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் மாணவியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய 2 மா்ம நபர்கள் அவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். இதையடுத்து அந்த மாணவி இது குறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மாணவியிடம் பேசிய மர்ம நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மாணவி வேலை கேட்டு விண்ணப்பித்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் திண்டிவனம் அடுத்த கீழ்காரனை கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜன்(வயது 34), சந்துரு (24) என்பது தெரியவந்தது. வேலைகேட்டு விண்ணப்பித்த மாணவியின் விண்ணப்பத்தில் இருந்து செல்போன் நம்பரை தெரிந்து கொண்டு அவருக்கு தொடர்ந்து இருவரும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாண்டியராஜன், சந்துரு ஆகிய 2 பேரையும் திண்டிவனம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.