முதல்-அமைச்சர் வருகை: சேலத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் செல்கிறார்.;
சேலம்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.
இதற்காக அவர் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்ப உள்ளார். இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.