அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் வி.கே.பாண்டியன் மனைவி - மத்திய அரசு ஒப்புதல்
ஒடிசா மாநில முன்னாள் முதல்-மந்திரியின் உதவியாளராக இருந்த வி.கே.பாண்டியனின் மனைவியான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விருப்ப ஓய்வு பெறுகிறார்.;

புவனேஸ்வரம்,
ஒடிசாவில் முதல்-மந்திரி மோகன் சரண் மஜி தலைமையில், பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு முந்தைய பிஜு ஜனதா தள ஆட்சியில், அப்போதைய முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக, தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி.கே.பாண்டியன் இருந்தார். கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்த பாண்டியன், 2023 அக்டோபரில், விருப்ப ஓய்வு பெற்றார். இதன்பின், பிஜு ஜனதா தளத்தில் முறைப்படி சேர்ந்த அவர், கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார்.
இதை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. கடுமையாக விமர்சித்தது. தொடர்ந்து, 2024ல் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.க.விடம் ஆட்சியை பிஜு ஜனதா தளம் பறிகொடுத்தது. இதற்கு வி.கே.பாண்டியன் தான் காரணம் என பரவலாகப் பேசப்பட்ட நிலையில், தீவிர அரசியலில் இருந்து அவர் விலகினார்.
இவருடைய மனைவி சுஜாதா. இவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவரை வி.கே.பாண்டியன் காதலித்து மணந்து கொண்டார். ஒடிசாவில் பா.ஜனதா தலைமையிலான அரசு பதவி ஏற்றதும், சுஜாதா வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அந்த பணியில் சேராமல் அவர் 6 மாத விடுப்பு எடுத்தார்.
விடுப்புகாலம் முடிந்த பின்னரும் தனது விடுப்பை நீட்டிக்குமாறு அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நெருக்கடியால் அவர் அந்த பணியில் சேரும் நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுஜாதா, சொந்த பணி காரணமாக அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா கார்த்திகேயனின் விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.