கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு
சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு சர்க்கரைத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33 சதவீதம் மற்றும் கருணை தொகையாக 11.67 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33 சதவீதம் மற்றும் கருணை தொகையாக 1.67 சதவீதம் என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5,775 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர். மேலும், மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.411.90 லட்சங்கள் செலவினம் ஏற்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.