பா.ஜ.க. மகளிர் அணி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான பா.ஜ.க. மகளிர் அணி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.;
மதுரை,
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.வைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க. அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி ராஜன் தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெற உள்ளதாக தமிழக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
நாளை (ஜனவரி 3) அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக கவர்னர் அவர்களைச் சந்தித்து, தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, மதுரையில் பா.ஜ.க. மகளிர் அணியினர் நாளை (ஜன.3) நடத்தவிருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.