முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறப்பால் நாசமான 4 மாவட்டங்கள்: ராமதாஸ் கண்டனம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-12-03 06:01 GMT

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு, சிந்திக்கும் திறனற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பற்ற அரசின் மிக மோசமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த பெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. அதனால், ஏரிகளும், குளங்களும் நிரம்பி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை போக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய தமிழக அரசு, அதற்கு மாறாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீரை திறந்து விட்டு மக்களின் இன்னல்களை பல மடங்கு பெருக்கியிருக்கிறது.

நள்ளிரவு 1.30 மணிக்கு சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், அடுத்த சில மணி நேரங்களில் 4 மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், தண்டராம்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணலூர்பேட்டை பேரூராட்சி, திருக்கோயிலூர் நகராட்சி, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சி, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி, கடலூர் மாவட்டம் குச்சிப்பாளையம், மேல்குமாரமங்கலம் புலவனூர், கண்டரக்கோட்டை, கள்ளிப்பட்டு உள்ளிட்ட முதன்மைப் பகுதிகளையும், இவற்றைச் சுற்றியுள்ள பல நூறு கிராமங்களையும் சுற்றி வளைத்த வெள்ளம், அங்குள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்த விவரம் அப்பாவி மக்களுக்கு தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பிறகு தான் மக்களுக்கு விவரமே தெரிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற எண்ணத்தில் அவர்கள் அனைவரும் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். தென்பெண்ணை ஆறு ஓடும் 4 மாவட்டங்களிலும் ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள பகுதிகளிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளம் புகுந்ததால் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கு மீட்புக் குழுவினரே இன்னும் செல்ல முடியாததால் அங்குள்ள மக்களுக்கு உணவு கூட கிடைக்கவில்லை.

4 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல் உள்ளிட்ட பயிர்களும், ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்ற கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்கி முற்றிலுமாக அழிந்து விட்டன. இந்த இழப்புகளில் இருந்து மீள்வதற்கு அப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகள் ஆகக்கூடும். அதிர்ச்சியிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவே சில நாட்களாகும்.

கர்நாடகத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக சாத்தனூர் வருகிறது. தொடங்கும் இடத்திலிருந்து சாத்தனூர் அணைக்கு வரும் வழி வரை அனைத்து இடங்களிலும் கடுமையான மழை பெய்வதால் காட்டாறுகள் உருவாகி அந்த நீரும், பாம்பாறு உள்ளிட்ட பல துணை நதிகளும் தென்பெண்ணை ஆற்றில் தான் இணைகின்றன. அதனால், சாத்தனூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை பகலிலேயே அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அணை நிரம்பி விடும் என்பது பொறியாளர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். தென்பெண்ணை ஆறு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீரை மட்டும் தான் தாங்கும்; அதற்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும் என்பதும் அணையின் பொறியாளர்களுக்கு தெரிந்தது தான்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலிருந்தே சாத்தனூர் அணையிலிருந்து கணிசமான அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டிருந்தால், இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது. ஆனால், எந்த எஜமானரின் ஆணைக்காக அவர்கள் காத்திருந்தார்கள்? என்பது தான் தெரியவில்லை. 2015ம் ஆண்டில் ஒரு நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதையே மீண்டும், மீண்டும் கூறி தனது தோல்விகளை நியாயப்படுத்தி வந்த திமுக அரசு, இப்போது நள்ளிரவில் சாத்தனூர் அணையை திறந்து விட்டதன் மூலம் அதை விட பல மடங்கு பேரழிவுக்கு காரணமாகியிருக்கிறது. ஆட்சி செய்யவே தகுதி இல்லாத கட்சி திமுக என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக கொடுக்கப்பட்ட விலை அதிகம்.

சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 2.50 லட்சம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில், நிலைமை ஒவ்வொரு மணி நேரமும் மோசமடைந்து வருகிறது. நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். சாத்தனூர் அணையை நள்ளிரவில் திறந்து பேரழிவை ஏற்படுத்தியதற்கான தமிழ்நாட்டு மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். சாத்தனூர் அணை முன்னறிவிப்பின்றி திறந்து விடப்பட்டதற்கு காரணம் என்ன? இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிய உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கும், உயிரிழந்த கால்நடைகளுக்கும் உரிய இழப்பீடு வேண்டும். மழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்