கொடைக்கானலில் 12 மீட்டர் நீளம் கொண்ட சுற்றுலா பஸ்களுக்கு தடை

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-11-12 01:16 GMT

கொடைக்கானல்,

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நகரின் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சோதனை சாவடியில் வாகனங்களை சோதனை செய்து அனுமதிக்கப்படுகிறது.

அப்போது சுற்றுலா பயணிகளிடம் இ-பாஸ் சோதனை, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் சோதனை மற்றும் நுழைவு கட்டண வசூல் போன்ற பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

இந்தநிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொடைக்கானலில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள சுற்றுலா பஸ்களை இயக்க விதிக்கப்பட்ட தடையை வருகிற 18-ந்தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதன்மூலம் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்