02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...

Update:2025-01-02 08:32 IST
Live Updates - Page 4
2025-01-02 07:44 GMT

ஜல்லிக்கட்டு போட்டி: மதுரை அவனியாபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல், பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான பணிகளை முகூர்த்தக் கால் ஊன்றி பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று தொடங்கி வைத்தார்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

2025-01-02 07:13 GMT

மருத்துவக் கழிவு விவகாரம்: கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது.

இதுதொடர்பாக வரும் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

2025-01-02 07:06 GMT

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்..? ஐகோர்ட்டு கேள்வி

பா.ம.க. போராட்டத்துக்கு அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி பி.வேல்முருகன், “பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் ?” என கேள்வி எழுப்பிய அவர் போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று கூறுங்கள். இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரத்தை கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல; வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்” என அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

2025-01-02 06:36 GMT

பா.ஜ.க. மகளிர் அணி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.வைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க. அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி ராஜன் தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெற உள்ளதாக தமிழக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

நாளை (ஜனவரி 3) அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக கவர்னர் அவர்களைச் சந்தித்து, தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, மதுரையில் பா.ஜ.க. மகளிர் அணியினர் நாளை (ஜன.3) நடத்தவிருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-01-02 06:13 GMT

யார் அந்த சார்..? - நேர்மையான விசாரணை தேவை - திருமாவளவன் கோரிக்கை

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது வி.சி.க. வின் கோரிக்கை. இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு அவ்வப்போது நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம். வேண்டுகோள் வைத்துள்ளோம்.

அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்துள்ள பாலியல் வல்லுறவு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும்கூட, அந்த குற்றச்செயல் பெரும் வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்கக் கூடாது. அவர் சிறையில் இருக்கும்போதே விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை கொடுக்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி வளாக விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தவிர்த்து வேறு சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் உள்ளது. அதனால், அரசும், காவல்துறையும் நேர்மையான முறையில் விசாரணை செய்து குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

2025-01-02 05:43 GMT

தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பா.ம.க. சார்பாக இன்று சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பா.ம.க.வின் மகளிர் அணி சார்பில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த சூழலில் காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

2025-01-02 05:23 GMT

தடையை மீறி போராட்டம் நடத்த பா.ம.க. மகளிரணி திட்டமிட்டுள்ளதால் போலீசார் குவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பா.ம.க. சார்பாக இன்று சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பா.ம.க.வின் மகளிர் அணி சார்பில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த சூழலில் காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வள்ளுவர்கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த பா.ம.க. மகளிரணி திட்டமிட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், கைது நடவடிக்கைக்காக பஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

2025-01-02 05:22 GMT

போபால் விஷவாயு கசிவு ஏற்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து 377 டன் அபாயகரமான கழிவுகள் நேற்று இரவு வெளியேற்றப்பட்டன. சீல் வைக்கப்பட்ட 12 கண்டெய்னர்களில் ஏற்றப்பட்ட கழிவுகள், போபாலில் இருந்து பசுமை வழித்தடம் வழியாக தார் மாவட்டத்தில் உள்ள பீதாம்பூர் தொழிற்பேட்டை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு கழிவுகள் பாதுகாப்பாக அழிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

2025-01-02 05:13 GMT

செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் வேளாண்மை - உழவர் நலத் துறையின் கீழ் செயல்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4-வது சென்னை மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இன்று தொடங்கிய மலர் கண்காட்சி ஜனவரி 18-ந்தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவில் சுமார் 800 வகையான வித, விதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. அரிய வகை மரங்களும் உள்ளன. மலர் கண்காட்சிக்காக கோவை, ஊட்டி, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 50 வகையான மலர்கள், 30 லட்சம் மலர் தொட்டிகள் இந்த மலர் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

2025-01-02 04:44 GMT

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்