கன்னியாகுமரி, அரூர் உள்பட புதிதாக 13 நகராட்சிகள் மற்றும் ஏற்காடு, காளையார்கோவில் உள்பட புதிதாக 25 பேரூராட்சிகள் உருவாக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
பள்ளி மாணவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளி போகும் என தகவல் தெரிவிக்கின்றது. இதன்படி, பள்ளிகள் வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கின்றது.
பட்ஜெட் - அமைச்சர் நாளை ஆலோசனை
பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்து வெளியாகப்போகும் அறிவிப்புகள் என்ன? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
2015-ம் ஆண்டு 200 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 8 பாகிஸ்தானியர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் ஒன்று 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது.
இளைஞர்களின் கனவு எப்படி நனவாகும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழகத்தில் 2024-ம் ஆண்டில் 10,701 பேருக்கு அரசு பணி வழங்கி உள்ளது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. ஆண்டிற்கு 10 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்கினால் இளைஞர்களின் கனவு எப்படி நனவாகும்?
வேலை வாய்ப்பு கோரி 60 லட்சம் பேர் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், அதிக காலி பணியிடங்களை வைத்திருப்பது என்பது அரசின் அலட்சியமே காரணம். காலியாக உள்ள 6.25 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - அ.தி.மு.க. கேவியட் மனு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும்போது தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
ரஷியாவில் இன்று முதல் புதிய சுற்றுலா வரி அமலுக்கு வந்துள்ளது.
ரஷியாவில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகள் தங்கும் ஓட்டல்கள் மற்றும் பிற தங்கும் விடுதிகளில் அவர்கள் தங்குவதற்காக கூடுதலாக 1 சதவீத வரி விதிக்கப்படும்.