திருப்பூர் வெடி விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

வீட்டில் வைத்து நாட்டு வெடி தயாரித்தபோது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி ஏற்கனவே 3 பேர் பலியாகி இருந்தனர்.

Update: 2024-10-09 13:04 GMT

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகர் அருகே உள்ள பொன்னம்மாள்நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 44). அவருடைய மனைவி சத்யபிரியா (34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வீட்டின் கீழ் தளத்தில் கார்த்திக் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதல் தளத்தில் உள்ள 3 அறைகளில் சிலர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு கார்த்திக் வீட்டில் இருந்து வெடிகுண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அந்த கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அக்கம்பக்கத்தினர், வீதியில் நின்றவர்கள் அலறியடித்தபடி வீட்டிற்குள் ஓடினார்கள்.

இந்த விபத்தில் கார்த்திக் வீட்டின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், அங்கிருந்த மளிகைக்கடை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இதேபோல் எதிரில் இருந்த 10-க்கும் மேற்பட்ட காம்பவுண்டு வீடுகளின் மேற்கூரை ஓடுகள் மற்றும் அங்கு இருந்த பொருட்களும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உடல் சிதறி பலியாகிக் கிடந்தார்.

மேலும் இந்த விபத்தில் மளிகைக்கடை உரிமையாளர் சக்திவேலின் மனைவி செல்வி (வயது 45), மற்றும் பக்கத்து வீடுகளில் வசிக்கும் குமார் (37), அபுல் ஹசன்- ஷகிலா பானு தம்பதியின் 9 மாத குழந்தை ஆலியா ஷெரின், பெருமாள் (65), சம்பா சாயத்ரி (20), தனுகுமாரி (10), மன்னுகுமாரி (8), ஹர்சித் (5), ஹன்சிகா (10), சத்தியாபிரியா (40), சந்திரா (55), இலக்கியா (33), பரமேஸ்வரி (51), தியா சவுத்ரி (11), நிரஞ்சனா (6), பிரியா மேகலா (32) ஆகிய 16 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் குழந்தை ஆலியா ஷெரின் மற்றும் குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் வெடி விபத்து சம்பவத்தில் 3 பேர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிரஞ்சனா என்ற 6 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக வெடிவிபத்து ஏற்பட்ட வீட்டின் உரிமையாளரான கார்த்திக் மனைவியின் அண்ணனான சரவணக்குமார் என்பவர் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் உரிமம் பெற்று பட்டாசுக்கடை நடத்தி வந்துள்ளார். தற்போது அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. கோவில் திருவிழாவுக்காக சரவணக்குமார் திருப்பூர் பாண்டியன்நகரில் உள்ள தங்கை வீட்டில் நாட்டுவெடிகளை தயாரித்து வந்த நிலையில்தான் நேற்று மதியம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் இந்த தகவல் தெரியவந்தது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், சரவணக்குமார் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்