முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் திருமாவளவன்

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் வெளியிட்ட வீடியோ சர்ச்சையான நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Update: 2024-09-15 16:22 GMT

கோப்புக்காட்சி

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலை எதிர்கொண்டது. இந்தநிலையில், 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலையும் தனது கூட்டணி கட்சிகளுடன் சந்திக்க தி.மு.க. வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

கூட்டணி கட்சிகளை தக்கவைக்கும் முயற்சியில் தி.மு.க.வும், புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அ.தி.மு.க.வும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோஷத்துடன் மதுவிலக்கு மாநாடு நடத்தப்படும் என்ற திடீர் அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டது. அத்துடன், இந்த மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க. மற்றும் விஜய் கட்சிக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்தார். தி.மு.க. கூட்டணியில் இருக்கும்போதே மதுவிலக்கு மாநாட்டுக்கு அ.தி.மு.க.வுக்கு திருமாவளவன் வெளிப்படையாக அழைப்பு விடுத்தது அந்த கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து விடுவாரோ என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இணையதளத்திலும் பரவலாக விவாதிக்கப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என அவரது கட்சி சார்பில் எக்ஸ் வலை தளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டு, நீக்கப்பட்டது எனக்கு தெரியாது. அட்மின் யாராவது செய்து இருப்பார்கள். நான் பார்த்து விட்டு சொல்கிறேன். பொதுவாக இதெல்லாம் காலம் காலமாக நாங்கள் சொல்லுகிற விஷயம்தான் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நாளை (16ம் தேதி) காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் வெளியிட்ட வீடியோ சர்ச்சையான நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்