தோப்பில் இளநீரை திருடி குடித்துவிட்டு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டிச்சென்ற மர்ம கும்பல்
இளநீரை திருடி குடித்த மர்ம கும்பல், நிலத்தின் உரிமையாளருக்கு செவ்விளநீர் மரங்களை வளர்க்கவும் என அறிவுறுத்தி சென்றனர்.
கள்ளக்குறிச்சி,
தோப்பில் புகுந்து இளநீரை திருடி குடித்துவிட்டு அங்குள்ள ஒரு புளிய மரத்தில் எச்சரிக்கை நோட்டீசை ஒட்டிவிட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல்(வயது 39). விவசாயியான இவருக்கு அதே கிராம எல்லையில் உள்ள தனது 5 ஏக்கர் நிலத்தில் தென்னை, மா, வாழை, கொய்யா, நெல்லி உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்து பராமரித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி அன்று குமரவேல் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றார்.
இதை அறிந்து கொண்ட மர்ம கும்பல் இரவோடு இரவாக அவரது தோப்புக்குள் புகுந்து அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி இளநீர் குலைகளை கயிறு மூலம் கீழே இறக்கி அவற்றை வெட்டி குடித்துள்ளனர். பின்னர் குமரவேலுவை எச்சரிக்கும் வகையில் அங்கு நின்ற புளிய மரத்தில் பட்டை நாமம் வரைந்த நோட்டீஸ் ஒன்றை ஒட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதற்கிடையே வெளியூரில் இருந்து ஊர் திரும்பிய குமரவேல் தனது நிலத்தை பார்த்து வர சென்றார். அப்போது அங்குள்ள தென்னை மரங்களில் இருந்து சுமார் 60 இளநீரை மர்ம கும்பல் வெட்டி குடித்துள்ளது தொியவந்தது.
பின்னர் தனது பசுமாட்டை அங்கு நின்ற புளியமரத்தில் கட்டிப்போட சென்ற அவர் இளநீர் திருடிய கும்பல் ஒட்டிச்சென்ற நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதில், தீர விசாரிக்காதீர்கள், இதுவே இறுதியாகட்டும், மீறி விசாரித்தால் மீண்டும் வேட்டை தொடரும் நன்றி.
வேண்டுகோள்:- செவ்விளநீர் மரங்களை வளர்க்கவும்.
எச்சரிக்கை:- எங்களை கண்டுபிடிக்க இயலாது.
இளநீரை திருடி குடித்த மர்ம கும்பல் நிலத்தின் உரிமையாளரை எச்சரிக்கும் வகையில் பட்டை நாமத்துடன் கூடிய நோட்டீசை ஒட்டிச்சென்ற சம்பவம் எஸ்.குளத்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.