14 புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சாம்சங் தொழிலாளர்கள் தயவு செய்து பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.;

Update:2024-10-08 12:52 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், துறை ரீதியான அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய திட்டங்கள், கொள்கைகள் குறித்தும், வளர்ச்சித் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மின்னணு, மென்பொருள், பாதுகாப்பு உபகரணம், பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உள்ளிட்ட துறைகள் சார்ந்த ரூ.38,600 கோடி மதிப்புள்ள 14 புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 46,931 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா நிறுவனம் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக 7 முறை தொழிலாளர் நலத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 3 அமைச்சர்களும் சேர்ந்து 10 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினோம். தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தவிர அனைத்தையும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

சாம்சங் ஆலையில் பணி செய்யும் ஊழியர்களுக்கும், போராடும் ஊழியர்களுக்கும் சில முரண்பாடு உள்ளது. ஒற்றை கோரிக்கை நிறைவேறாததன் காரணமாக போராட்டம் தொடர்கிறது. தொழிற்சங்க அங்கீகாரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக தொழிலாளர்களிடம் கூறப்பட்டது.

சாம்சங் தொழிலாளர்கள் தயவு செய்து பணிக்கு திரும்ப வேண்டும்.. ஒவ்வொரு நாளும் அந்த குடும்பத்திற்கு ஊதிய இழப்பு ஏற்படுகிறது. இது எந்தவிதத்தில் நியாயம்?. தொழிலாளர்கள், முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர் எப்போதும் உங்கள் பக்கம்தான் நிற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்