மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவி: ஆசிரியர்கள் அதிர்ச்சி

போதை தலைக்கு ஏறியதால் தன்னிலை மறந்து சக மாணவர்களையும், ஆசிரியரையும் பார்த்து ஆவேசமாக மாணவி திட்டியுள்ளார்.

Update: 2024-09-12 20:15 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு கடந்த 8-ந் தேதி 11-ம் வகுப்பு மாணவி மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்துள்ளார்.

போதை தலைக்கேறிய மாணவிக்கு திடீரென தலைசுற்றல் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மாணவி, தன்னிலை மறந்து சக மாணவர்களையும், ஆசிரியரையும் பார்த்து ஆவேசமாக திட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரும், இந்த மாணவியும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று அந்த மாணவருக்கு பிறந்தநாள் என்பதால், அவர் சக மாணவர்களுக்கு மது விருந்து கொடுத்துள்ளார்.

இதில் மாணவியும் கலந்து கொண்டு மது குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அந்த மாணவியை அவரது வீட்டுக்கு ஆசிரியர்கள் அழைத்துச்சென்று விட்டனர்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், தனது மகளுக்கு மது வாங்கி கொடுத்த மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்