கணவரின் 3-வது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - 2-வது மனைவி புகார்

கணவரின் 3-வது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று 2-வது மனைவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Update: 2024-07-23 08:16 GMT

வேலூர்,

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சாவூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறேன். எனது முதல் கணவர் கடந்த 2021-ம் ஆண்டு இறந்துவிட்டார். அதன்பின்னர் மறுமணம் செய்வதற்காக திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்தேன். அதனை பார்த்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர், என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, அவர் முதல் மனைவியுடன் விவாகரத்து ஆகிவிட்டது என்றும், என்னை 2-வது திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து இருவரும் ஓராண்டாக செல்போனில் வீடியோ காலில் பேசினோம். இந்தியா திரும்பிய என்னை கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மைசூருக்கு அழைத்து சென்று ஓட்டலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் சில நாட்களில் நான் வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டேன். 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்தியாவுக்கு வருவேன். அப்போது அவர் வீட்டுக்கு அழைத்து செல்லாமல் சென்னை, பெங்களூரு, ஏலகிரி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றார். இதுகுறித்து கேட்டதற்கு அவர் பெற்றோருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் எனது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. திடீரென செல்போன் எண்ணையும் பிளாக் செய்து விட்டார். அதனால் கடந்த மாதம் குடியாத்தம் வந்து வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேச முயன்றேன். அவரை பார்க்க விடாமல் குடும்பத்தினர் தடுத்து விட்டனர்.

தற்போது 3-வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கூறி, அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை எனது செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். எனவே அவருக்கு நடக்க இருக்கும் 3-வது திருமணத்தை தடுத்து நிறுத்தி என்னுடன் வாழ வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்