தூத்துக்குடியில் தொழில் தொடங்கும் சிங்கப்பூர் நிறுவனம்: 1,500 பேருக்கு வேலை கிடைக்கும்

பசுமை ஹைட்ரஜன் அலகு தொழிற்சாலையை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை சிங்கப்பூர் நிறுவனம் தொடங்கி உள்ளது.

Update: 2024-07-18 18:58 GMT

தூத்துக்குடி,

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் வகையில் 2030-2031-ம் நிதி ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மேம்பட செய்வதே தனது லட்சியம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்த இலக்கை அடைவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தொழில்துறை செயலாற்றி வருகிறது. அதன்படி வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஆண்டுதோறும் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை கொண்டு வருவதற்காகவும், சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது இந்த நாடுகளை சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் சிங்கப்பூரை சேர்ந்த செம்கார்ப் நிறுவனம் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது. இதில் இந்த நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.36 ஆயிரத்து 238 கோடி முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் அலகு தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தற்போது இந்த தொழிற்சாலையை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை இந்த நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பசுமை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 'செம்ப்கார்ப்' நிறுவனம் 2 ஜப்பானிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள உள்ளது என்றும், இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தமிழக அரசின் தொழில்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்