கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இன்று காலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-07-10 07:08 GMT

மதுரை,

மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது சுங்கச்சாவடியை இடிக்க ஜேசிபி வாகனங்களுடன் போராட்டக்காரர்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜேசிபியுடன் வந்த போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் கைதுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதனை அகற்றக் கோரி பலமுறை முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். 2024-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் (பக்கம் 27), சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

எனவே அப்பகுதி மக்களுடன் இணைந்து கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என்றும், மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்களில் செல்லும்போது அவர்களுக்கு முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டுமென்றும் அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்து போராடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான, ஆர். பி. உதயகுமாரையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களையும், கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் கைது செய்துள்ள தி.மு.க. அரசிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்பகுதி மக்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், கைதுசெய்துள்ள கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை உடனடியாக விடுவிக்குமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்