தருமபுரியில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றாவிட்டால் போராட்டம் - அன்புமணி ராமதாஸ்

தருமபுரியில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-08 10:01 GMT

தருமபுரி,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரியில் கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டார். அதன் பின்னர் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

தருமபுரி மாவட்டத்தில் ஒரே ஒரு பிரச்சினை பெரிய பிரச்சினையாக உள்ளது. அது தண்ணீர் பிரச்சினை. இந்த பிரச்சினையை தீர்க்க பா.ம.க.வினர் பல கட்டங்களாக போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அரங்கேற்றி இருக்கிறோம். அதன் விளைவாக நிறைவேற்றப்பட்டது தான், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் விவசாயம் நிறைந்த மாவட்டம் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால், 2, 3, அல்லது 5 ஏக்கர் வரை நிலம் வைத்து முதலாளியாக இருந்த விவசாயிகள் தற்போது கூலி ஆட்களாக திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், பெங்களூரு, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினக்கூலிகளாக வேலைக்கு செல்கின்றனர்.

பல கட்டங்களாக போராட்டம் நடத்தியதன் விளைவாக சென்ற ஆட்சியில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றுவதாக ஒரு அறிவிப்பையும் முன்பு இருந்த அரசு வெளியிட்டது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு காவிரி உபரி நீர் திட்டம் குறித்து எந்தவித அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை. இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஒரு நாள் மட்டும் 17 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது.

ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரி நீரை நிரப்புவதற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது. இந்த தண்ணீர் ஒரு ஆண்டிற்கு போதுமானது.இதைக்கூட நிறைவேற்ற தி.மு.க. அரசுக்கு மனமில்லை. அதனால் அகிம்சை முறையில் முதற்கட்டமாக அடுத்த மாதம் 4-ந்தேதி தருமபுரியில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை அனைத்து கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கு அரசுக்கு செவி சாய்க்கவில்லை என்றால், எங்களது போராட்டம் வேறு விதமாக இருக்கும்."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்