பெற்றோர் எதிர்ப்பு: விமானத்தில் பறந்து காஷ்மீரில் திருமணம் செய்த காதல் ஜோடி

காதல் ஜோடி இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2024-07-11 03:15 GMT

கோப்புப்படம் 

வேலூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் தவுலத். இவரது மகள் சுமையா பேகம் (22 வயது). திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கத்தமிழன். ஐ.டி.ஐ. படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரும், சுமையா பேகமும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே தெருவில் வசித்தபோது பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். இவர்களுடைய காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி கல்லூரிக்கு சென்ற சுமையா பேகம் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சுமையா பேகத்தை தேடி வந்தனர்.

காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். அங்கிருந்து காஷ்மீர் புறப்பட்டனர். அங்கு உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து போலீசார் தேடுவதை அறிந்ததும் அங்கிருந்து மீண்டும் விமானம் மூலம் பெங்களூரு வழியாக வந்து நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து இரு தரப்பு பெற்றோரையும் போலீசார் வரவழைத்துப் பேசி, காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால், சுமையா பேகத்தை அவரது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்