ஏ.டி.எம்.களில் கொள்ளை: வடமாநில கும்பலை விரட்டி பிடித்த நாமக்கல் போலீசார் - நடந்தது என்ன?

கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்த வடமாநில கும்பலை நாமக்கல் போலீசார் விரட்டி பிடித்தனர்.

Update: 2024-09-27 12:13 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வடமாநில கொள்ளைகும்பல் இன்று பிடிபட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.களில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது. இதில் 65 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துவிட்டு கொள்ளை கும்பல் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச்செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி போலீசார் நிறுத்தியும் நிற்காமல் சென்றது. இதையடுத்து விரட்டி சென்ற போலீசார் கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர்.

பின்னர், லாரி கண்டெய்னரை திறக்க முற்பட்டபோது போலீசாரை தாக்கிவிட்டு லாரி டிரைவர் மற்றும் கண்டெய்னரில் இருந்த மற்றொரு கொள்ளையர் தப்பியோடினார். இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் லாரி டிரைவரான கொள்ளையர் உயிரிழந்தான். 

இந்த சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஜிபி உமா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கேரள கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லாரி சோதனையில் நிற்காமல் சென்றது. நிற்காமல் சென்றதால் போலீசார் அந்த லாரியை பின்தொடர்ந்து சென்றனர்.

சங்ககிரி சுங்கச்சாவடி வரை லாரி சென்றது. சுங்கச்சாவடியில் இருந்து மீண்டும் திரும்பி வந்தது. மீண்டும் 2 முறை சங்ககிரி வரை சென்றுவிட்டு வெப்படை வழியாக லாரி வந்தது.

வெப்படை ரோட்டில் வரும்போது சண்யாசிபட்டி பகுதியில் லாரி வேகமாக வந்தது. அதற்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர்.

2 பைக்குகள், 1 கார் மீது மோதி லாரி வேகமாக வந்தது. பின்னர், லாரியை விரட்டி இடைமறித்து போலீசார் நிறுத்தினர்.

லாரியில் இருந்த டிரைவரை கீழே இறக்கி அவரை உடனடியாக கைது செய்தோம்.

லாரியின் கேபினில் டிரைவருடன் 4 பேர் இருந்தனர். அந்த 4 பேரையும் கைது செய்தோம். அந்த லாரி கேரளாவின் திரிச்சூரில் இருந்து வந்தது என்றும் நமக்கு தகவல்கள் கிடைத்தன.

தகவல் கிடைத்த உடன் இந்த லாரியை சண்யாசிபட்டியில் இருந்து வேப்படை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்துவிடலாம் என்று நாம் வருகிறோம்.

வரும் வழியில் லாரியை ஜூமான் என்பவர் ஓட்டி வந்தார். லாரியில் போலீசார் இருந்தனர். லாரிக்கு முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள் சென்றன.

அப்படி செல்லும்போது லாரியில் உள்ள கண்டெய்னரில் இருந்து அதிக சத்தம் வந்தது. சத்தம் கேட்ட உடன் டிரைவரிடம் சொல்லி தோப்புக்காடு பகுதியில் லாரியை நிறுத்தினோம். பின்னர், லாரி டிரைவர் ஜூமானை அழைத்து கண்டெய்னரை திறக்க கூறினோம். கதவை திறந்து பார்க்கும்போது கண்டெய்னரில் 2 பேர் இருந்தனர்.

அப்போது, திடீரென கண்டெய்னரில் இருந்த நபர் தனது கையில் நீல நிற பையுடன் கீழே குதித்து ஓடினார். லாரி டிரைவர் ஜூமானும் போலீசார் பிடியில் இருந்து காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓட்டினார். தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டரை ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பியோடினர்.

தோப்புக்காடு பகுதியில் உள்ள ஒரு ஓடையில் இறங்கி அஸ்ரூ என்ற கொள்ளையன் பணப்பையுடன் ஓடினான். அஸ்ரூவுடன் சேர்ந்து ஓடிய ஜூமான் ஓடையில் வழுக்கி விழுந்தார். ஜூமானை எஸ்.ஐ. பிடிக்க முயன்றபோது அவரை தாக்கினார். இதையடுத்து, பின்னால் வேகமாக வந்த இன்ஸ்பெக்டர், ஜூமான் எஸ்.ஐ.- ஐ தாக்கியதையடுத்து தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டார். இஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதில் கொள்ளையன் ஜூமான் உயிரிழந்தான்.

இதையடுத்து, மற்றொரு கொள்ளையன் அஸ்ரூவை நிற்கும்படி எஸ்.ஐ. எச்சரித்தார். அப்போது, கொள்ளையன் அஸ்ரூ பணப்பையை கீழே போட்டுவிட்டு அங்கு கிடந்த கற்கலை எடுத்து இன்ஸ்பெக்டரை நோக்கி வீசினான். இதனை தொடர்ந்து அஸ்ரூ முக்கிய குற்றவாளி என்பதால் அவன் தப்பியோடாமல் இருப்பதற்காக இன்ஸ்பெக்டர் அவனது காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த கொள்ளையன் அஸ்ரூவை கைது செய்துள்ளோம்.

இந்த கொள்ளை கும்பல் ஏ.டி.எம்.களை குறிவைத்து கொள்ளையடிக்கின்றனர். ஏ.டி.எம்.ல் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதுதான் இவர்களது நோக்கம். கைது செய்யப்பட்ட கொள்ளையர்களில் 5 பேர் அரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மற்றொருவர் அரியானாவின் நூ மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கொள்ளையன் அஸ்ரூ கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். எஞ்சிய 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை இதுவரை எண்ணவில்லை. கண்டெய்னர் லாரிக்குள் ஒரு வெள்ளை நிற கிரிட்டா கார் இருந்தது. அந்த காரை கேரளாவின் திரிச்சூரில் ஏ.டி.எம். கொள்ளையில் பயன்படுத்தியுள்ளனர்.

அந்த காரில் சென்றுதான் திரிச்சூரில் 3 எ.டி.எம்.களில் கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் கிரிட்டா காரை கண்டுபிடிக்க வாகன சோதனையில் ஈடுபட்டோம்.

இந்த கொள்ளை சம்பவத்தில் மொத்தம் 7 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். எஞ்சிய 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இதுவரை எந்த வழக்குகளும் இல்லை. கிருஷ்ணகிரி ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக அரியானாவின் மேவத் பகுதியை சேர்ந்த குற்றவாளிகள் 2 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளோம்.

தற்போது பிடிபட்டவர்களுக்கும், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஏதேனும் திட்டம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கொள்ளை சம்பவம் கேரளாவில் நடந்ததால் அம்மாநிலத்தை சேர்ந்த போலீசார் நம்முடன் சேர்ந்து விசாரணை நடத்தலாம். கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது காயமடைந்த 2 போலீசார் தற்போது சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் நலமுடன் உள்ளனர்.

ஹவாரியா கொள்ளை கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதுபோன்று தெரியவில்லை. தீவிரவாத கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இல்லை.

நாமக்கலில் 3 வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். தமிழக போலீசார் முதற்கட்ட விசாரணையை நிறைவு செய்தபின் கேரள போலீசார் விசாரணையை தொடங்குவார்கள்.

கொள்ளையர்கள் பணத்தை மட்டுமே கொள்ளையடித்துள்ளனர். பிடிபட்ட கொள்ளையர்கள் ஏ.டி.எம்.களை குறிவைத்தே கொள்ளையடிக்கின்றனர்.

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் எப்போதுமே பணம் இருக்கும் என்பதால் அந்த ஏ.டி.எம்.களை குறிவைத்தே கொள்ளையடிப்பதாக பிடிபட்ட கொள்ளையர்கள் கூறினார்.

கொள்ளையர்கள் எப்படி திட்டமிடுகின்றனர் என்றால், அரியானாவில் இருந்து கண்டெய்னர் லாரியில் கிளம்பி டெல்லியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு கும்பல் சென்னை வருகிறது. சென்னையில் சரக்குகளை இறக்குகின்றனர். மற்றொரு கும்பல் கிரிட்டா காரில் வருகின்றனர். அந்த இரு கும்பலும் பின்னர் சேர்ந்துகொள்கின்றனர்.

பின்னர், அனைவரும் இணைந்து திரிச்சூருக்கு செல்கின்றனர். கூகுள் மேப் மூலம் எங்கெல்லாம் ஏ.டி.எம்.கள் உள்ளது என்று பார்க்கின்றனர். அந்த ஏ.டி.எம்.களை குறிவைத்து அங்கு செல்கின்றனர். கண்டெய்னர் லாரி கொள்ளை சம்பவம் நடைபெறும் பகுதி ஏ.டி.எம்.கள் அருகே செல்வதில்லை. காரில் சென்று ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துவிட்டு திரும்பி வருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றபின்னர், காரை கண்டெய்னர் லாரிக்குள் ஏற்றிவிடுகின்றனர். பின்னர், அனைவரும் அந்த லாரியில் பயணம் செய்கின்றனர்.

சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்னை வரும் கண்டெய்னர் லாரியில் பின்னர் அனைவரும் ஒன்றாக சொந்த ஊர் செல்லும்போது கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு செல்கின்றனர்.

கியாஸ் கட்டிங் மூலம் ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கின்றனர். பணம் சேதாரம் ஆகாத அளவிற்கு கியாஸ் கட்டிங் மூலம் ஏ.டி.எம். மேல் உள்ள மூடியை வெட்டி எடுத்துவிட்டு உள்ளே உள்ள பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரி எப்போதும் வழக்கமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சரக்குகளை ஏற்றிவரும் லாரிதான். கூகுளில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.கள் எங்கு உள்ளது என்று பார்த்து அந்த ஏ.டி.எம்.களை குறிவைத்து கொள்ளையடிக்கின்றனர்.

இந்த கொள்ளை கும்பல் போன்று பல கொள்ளை கும்பல்கள் இருக்கலாம். கிருஷ்ணகிரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அரியானாவின் மேவத் பகுதியை சேர்ந்த கொள்ளையர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். கொள்ளையர்கள் தொடர்பான புகைப்படங்கள், இதர விவரங்களை விரைவில் வெளியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்