மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது

Update: 2024-08-01 07:19 GMT

சேலம்,

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. 1,40,000 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில் மேலும் 35 ஆயிரம் கனஅடி அதிகரித்துள்ளது. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்ததால் ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடானது. காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நண்பகல் 12 மணி நிலவரப்படி 1.70 லட்சம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளதால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்