அனுமதியின்றி கொடியேற்றக் கூடாது: "நடவடிக்கை பாயும்" - தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் எச்சரிக்கை

அனுமதியின்றி எங்கும் கொடியேற்றக் கூடாது என்று தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2024-08-25 08:27 GMT

சென்னை,

சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தியதுடன், கொடிப் பாடலையும் அக்கட்சியின் தலைவர் விஜய் கடந்த 22-ம் தேதி வெளியிட்டார். கொடியில் மேலும் கீழும் ரத்தச் சிவப்பு நிறமும், மையப் பகுதியில் மஞ்சள் நிறமும் இடம்பெற்றன. கொடியின் நடுவில் வாகைப்பூவும் அதன் இருபுறமும் காலை உயர்த்திய இரு போர் யானைகளும், 28 நட்சத்திரங்களும் இடம்பெற்றிருந்தன.

தமிழக அரசியலில் நடிகர் விஜயின் இந்த அடுத்த கட்ட நகர்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் இன்னும் பரபரப்பாக இயங்க துவங்கி உள்ளனர்.

இந்த சூழலில் 234 தொகுதிகளிலும் இன்று கட்சி கொடியை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏற்றி வருகின்றனர். பல இடங்களில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அனுமதியை மீறி கட்சி கொடியை ஏற்றி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அனுமதியின்றி எங்கும் கொடியேற்றக் கூடாது என்று தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் விதிகளை மீறி கொடிக்கம்பங்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்