சாட்டை துரைமுருகன் கைது - ஜெயக்குமார் கண்டனம்
சாட்டை துரைமுருகன் கைது நடவடிக்கைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறான கருத்துகளை பேசியதாக எழுந்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சாட்டை துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சாட்டை துரைமுருகன் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயக்குமார் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,
"நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பி சாட்டை துரைமுருகனை கைது செய்திருப்பது கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல்! அவதூறு பரப்புவதில் அவார்டுகள் பல வாங்கி வைத்துள்ள இயக்கமே திமுக தான்!
சாட்டை சேனலில் திமுக அரசின் அவலங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தியதற்காகவும் மேடைகளில் ஸ்டாலின் அரசின் தோல்விகளை அடுக்கியதற்காகவும் தமிழ்நாட்டை சூறையாடி தின்று கொழுத்த திமுகவை விமர்சித்து வந்ததற்காகவும் பழிவாங்கி உள்ளது திமுக அரசு! பாசிச ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் ஸ்டாலின், அவருடைய ஆட்சிக்கான முடிவுரையை அவரே எழுதிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்!!"
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.