ஆம்ஸ்ட்ராங் கொலை பேரதிர்ச்சியை தருகிறது: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-06 04:01 GMT

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 8 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்