53 காவலர் குடியிருப்புகள், 6 காவல் நிலையங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

53 காவலர் குடியிருப்புகள், 6 காவல் நிலையக் கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2024-08-01 08:27 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், "உங்கள் சொந்த இல்லம்" திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் அரசு செயல்படுத்தி வருகிறது.

காவல்துறையின் பணிகள் சிறக்க, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை, ரூ.454.63 கோடி செலவில் 2,733 காவலர் குடியிருப்புகள், ரூ.43.60 கோடி செலவில் 41 காவல் நிலையக் கட்டடங்கள், ரூ.69.83 கோடி செலவில் 14 காவல்துறை இதரக் கட்டடங்கள் மற்றும் "உங்கள் சொந்த இல்லம்" திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பிலான 253 குடியிருப்புகள் ஆகியவை காவல்துறையினரின் மேம்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஜெம்புநாதபுரத்தில் 3 கோடியே 97 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 29 காவலர் குடியிருப்புகள் மற்றும் உறையூரில் 3 கோடியே 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 24 காவலர் குடியிருப்புகள், என 6 கோடியே 99 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 53 காவலர் குடியிருப்புகள்;

சென்னை மாவட்டம் -டி.பி சத்திரம் மற்றும் ஜெ.ஜெ நகரில் 3 கோடியே 70 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவிலும், புதுக்கோட்டை மாவட்டம் - ரெகுநாதபுரத்தில் 78 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1 கோடியே 6 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலையங்கள், திருச்சி மாவட்டம் பீமா நகரில் 2 கோடியே 70 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அமர்வு நீதிமன்ற காவல் நிலையம் மற்றும் சிந்தாமணியில் 3 கோடியே 19 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கோட்டை காவல் நிலையம், என 11 கோடியே 43 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 காவல் நிலையங்கள்;

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் இரண்டாம் கட்டமாக 17 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பொதுப்பள்ளி மற்றும் தென்காசியில் 11 கோடியே 64 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலகம், என 29 கோடியே 7 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல் துறைக் கட்டடங்கள் என மொத்தம் 47 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 53 காவலர் குடியிருப்புகள், 6 காவல் நிலையங்கள் மற்றும் 2 காவல்துறை கட்டடங்கள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) வினித் தேவ் வான்கேடே ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்