புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
வருகிற 28-ந் தேதி அக்னி நட்சத்திரம் நிறைவு பெறும் நிலையில் புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது.;
புதுச்சேரி
வருகிற 28-ந் தேதி அக்னி நட்சத்திரம் நிறைவு பெறும் நிலையில் புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது.
கோடைக்கு முன்பே...
புதுச்சேரியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மக்கள் அஞ்சினர்.
அதற்கு ஏற்ப கோடைகாலம் தொடங்கிய சில வாரங்கள் காலை 8 மணி முதலே வெயில் வாட்டி வதைத்தது. இதனால் காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.
அக்னி நட்சத்திரம்
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. வழக்கமாக அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும். பெரும்பாலான நாட்கள் 100 டிகிரியை தாண்டியே வெயில் அளவு பதிவாகும்.
ஆனால் இந்த ஆண்டு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக புதுவையில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
97 டிகிரி வெயில்
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் முகத்தை மூடிக்கொண்டும், தொப்பி அணிந்தும் சென்றதை காணமுடிந்தது. நேற்று 97 டிகிரி வெயில் அளவு பதிவானது.
வெயில் அளவு 100 டிகிரியை எட்டவில்லை என்றாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இறுக்கமான ஒருவித நிலை காணப்பட்டது. இரவில் வழக்கத்தை விட அதிக புழுக்கத்தை உணர முடிந்தது.
இந்த ஆண்டு 100 டிகிரி பதிவாகாமலேயே 28-ந் தேதி (சனிக்கிழமை) அக்னி நட்சத்திரம் விடைபெற உள்ளது.