குற்றவாளிகளை கண்காணிக்க 24 இடங்களில் அதிநவீன கேமரா
முத்தியால்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை அமைச்சர் நமச்சிவாயம் இயக்கி வைத்தார்.;
புதுச்சேரி
முத்தியால்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை அமைச்சர் நமச்சிவாயம் இயக்கி வைத்தார்.
அதிநவீன கேமரா பொருத்தம்
புதுவை முத்தியால்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, போக்குவரத்து இடையூறுகளை தடுக்கும் வகையில் அதிநவீன கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முத்தியால்பேட்டையில் 64 இடங்களில் கேமராக்கள் பொருத்த இடம் தேர்வு செய்யப்பட்டன. இதன் முதற்கட்டமாக முத்தியால்பேட்டை பகுதியில் 24 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இதற்கான கட்டுப்பாட்டு அறை முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., புதுவை போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஷ்னியா, கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்தமோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதர ரெட்டி, போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம்
இதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நகரில் ஒருபகுதி காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும். இதேபோல் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். புதுவை காவல்துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளோம். மத்திய அரசு அனுமதி வழங்கிய உடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குற்றவாளி நடமாட்டம்
முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்தபடி அதிநவீன கேமராக்களில் பதிவான காட்சிகளை கண்காணிக்க பெரிய அளவிலான டி.வி. அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராவில் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நவீன கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு அந்த கண்காணிப்பு கேமராக்களை குற்றவாளி கடக்கும்போது அடையாளம் காணும் வசதியும் உள்ளது. இதன் குற்றவாளிகள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும். மேலும் குற்றவாளி எந்த பகுதியை கடந்து சென்றார் என்ற தகவலையும் தனியாக சேமித்து வழங்கும் வசதி உள்ளது.