முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன், நிர்வாகிகள் சந்திப்பு
அமெரிக்க துணை ஜனாதிபதி தாயார் பெயரில் கல்வி அறக்கட்டளை சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சந்தித்து பேசினர்.;
புதுச்சேரி
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் தாயார் சியாமளா கோபாலன் பெயரில் தொடங்கப்பட்டுள்ள கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சுரேஷ் ரெட்டி தலைமையில் அதன் பிரதிநிதிகள் இன்று புதுச்சேரி வந்தனர். அவர்கள் சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது சியாமளா கோபாலன் அறக்கட்டளையின் மூலம் இந்த ஆண்டில் ரூ.500 கோடி மதிப்பில் 'ஸ்ரீ வேல்டு ஸ்கூல்' என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட உள்ள பள்ளிக்கு ஆதரவை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் ஆலோசகரும், அறக்கட்டளையின் ஆலோசனைக் குழு உறுப்பினரும், அமெரிக்க நாட்டின் தெற்கு கரோலினா மாநிலப் செனட்டருமான ஜே.ஏ.மூர் கலந்து கொண்டு, அறக்கட்டளையின் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் எடுத்து கூறினார். மேலும் அடுத்த ஆண்டு இந்த அறக்கட்டளையால் இந்தியாவில் உலகக் கல்வி உச்சி மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் கொரோனா தொற்றுக்குப் பிறகு கல்வியில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், தீர்வுகள் மற்றும் புதிய போக்குகள் குறித்து கவனம் செலுத்தப்படும், புதிய கல்விக்கூடம் புதுவையில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது அறக்கட்டளையின் இந்திய பிரதிநிதி வக்கீல் ராம் முனுசாமி உடனிருந்தார்.