ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி 22-ந்தேதி ஆர்ப்பாட்டம்
கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி 22-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த காரைக்கால் மாவட்ட பயணிகள் நலச்சங்கம் முடிவு செய்துள்ளனர்.;
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட ரெயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் அன்சாரி பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடெங்கும் கொரோனா பரவலால் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் காரைக்காலில் இருந்து வழக்கமாக இயக்கப்பட்டு வந்த ரெயில்கள் அனைத்தையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக பெங்களூரு-காரைக்கால், காரைக்கால்-திருச்சி, காரைக்கால்-தஞ்சாவூர் உள்ளிட்ட ரெயில்களை மீண்டும் உடனடியாக இயக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் காரைக்கால் மாவட்ட ரெயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் வருகிற 22-ந்தேதி காரைக்கால் ரெயில் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.