காவலாளிக்கு 2 ஆண்டு சிறை
புதுவையில் போலி நகை அடகு வைத்த மோசடி வழக்கில் காவலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;
புதுச்சேரி
புதுச்சேரி காமராஜர் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தங்க மூலாம் பூசப்பட்ட 62 வளையல்களை அடகு வைத்து ரூ.13 லட்சத்து 63 ஆயிரம் மோசடி நடந்தது. இதுகுறித்து கடந்த 2015-ம் ஆண்டு பெரியகடை போலீசார் விசாரணை நடத்தி பரத், முத்தியால்பேட்டை காவலாளி கலைச்செல்வன் (வயது60) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்து வந்தது. இதற்கிடையே கொரோனா தொற்றால் பரத் உயிரிழந்தார். இந்த வழக்கில் இன்று காவலாளி கலைச்செல்வனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் கணேஷ் ஞானசம்பந்தன் ஆஜராகி வாதாடினார்.