வயநாடு: அதிர்ச்சியில் ஓர் ஆச்சரியம்...!! விடியும் வரை பாட்டி-பேத்தியை காவலாக நின்று பாதுகாத்த யானைகள்

வயநாட்டில் வெள்ளத்தில் வீடு இழந்து, பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் ஒரு வழியாக கரையேறி, காபி தோட்டத்துக்குள் சென்றுள்ளனர்.

Update: 2024-08-03 10:58 GMT

வயநாடு,

கேரளாவின் வயநாட்டில் கடந்த 4 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

இந்த பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 358 ஆக உயர்வடைந்து உள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீசார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சூரல்மலை பகுதியில் வெள்ளத்தில் வீடு இழந்து, அதில் இருந்து தப்பி தன்னுடைய பேத்தி மற்றும் குடும்பத்தினருடன் தேயிலை தோட்டத்தில் தஞ்சமடைந்தபோது, யானைகள் சேர்ந்து அவர்களை பாதுகாத்த விசயங்களை சுஜாதா என்பவர் பகிர்ந்துள்ளார். அவர் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, வெள்ளம் கடல் போல் காட்சியளித்தது. பெரிய மரங்கள் எல்லாம் மிதந்தபடி சென்றன. அவை எங்கள் வீட்டின் மீது வந்து இடித்தன. வீட்டுக்கு வெளியே பார்த்தபோது, என்னுடைய பக்கத்து வீட்டுக்காரரின் 2 அடுக்கு வீடு சரிந்து விழுந்தது. அது எங்கள் வீட்டின் மீது விழுந்தது.

இதில், நாங்கள் அனைவரும் சிக்கி கொண்டோம். எனினும், எப்படியோ தப்பி வெளியே வந்தேன். என்னுடைய பேத்தி மிருதுளாவின் (வயது 12) அழுகுரல் கேட்டது. அவளுடைய கைகளை பற்றி மெதுவாக இடிபாடுகளுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்தேன்.

ஒரு துணியால் அவளை மூடியபடி, வெள்ள நீரில் இருவரும் நீந்த தொடங்கினோம் என்று கூறினார். இவருடைய மகன் கிகீஷ், மருமகள் சுஜிதா மற்றும் பேரன் சூரஜ் (வயது 18) மூன்று பேரும் அருகேயுள்ள வீட்டில் இருந்துள்ளனர். கிகீஷ் வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை, ஒவ்வொருவராக தண்ணீரில் இருந்து இழுத்து, வெளியே கொண்டு வந்துள்ளார்.

ஒரு வழியாக அனைவரும் கரையேறி, காபி தோட்டத்துக்குள் சென்றுள்ளனர். அப்போது அடுத்த அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது. யானை ஒன்று அவர்களின் வழியில் நின்றிருந்தது. அது ஆக்ரோசத்துடன் காணப்பட்டது. இதனால், நாங்கள் பயந்து போயிருந்தோம்.

அப்போது அதனிடம் நான், பேரிடரில் இருந்து தப்பித்து வந்திருக்கிறோம். நாங்கள் பயந்து போயிருக்கிறோம். எல்லா இடத்திலும் இருளாக உள்ளது. தண்ணீர் சுற்றி சூழ்ந்துள்ளது. நாங்கள் நீந்தி வந்திருக்கிறோம். எங்களை எதுவும் செய்து விடாதே என கேட்டு கொண்டோம் என கூறியுள்ளார்.

அதன் அருகே வேறு 2 யானைகள் இருந்துள்ளன. இதனால், அந்த இரவை அவர்கள் ஒருவித அச்சத்துடனேயே கழித்துள்ளனர். தொடர்ந்து அவர், அந்த யானையின் கண்கள் குளம்போல் காட்சியளித்தன. எங்கள் அருகேயே நின்றிருந்தது. அசைவின்றி விடியும் வரை அமைதியாக இருந்தது என்று கூறியுள்ளார். அவர்களை அந்த யானைகள் எதுவும் செய்யவில்லை. விடியும் வரை பாதுகாப்பாக உடன் இருந்தது.

அடுத்த நாள் காலை, சுஜாதா மற்றும் அவருடைய குடும்பத்தினரை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து இருக்கிறார்கள். இதன்பின், மலையில் இருந்து பாதுகாப்பாக வீடு ஒன்றுக்கு அழைத்து வந்து நல்ல ஆடைகள், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை அவர்களுக்கு வழங்கினர்.

இதில், சுஜாதா மற்றும் மிருதுளா இருவரும் மேப்படியில் உள்ள முகாமுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுடைய மற்ற குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்