உ.பி.: படிக்காமல் மதிய வேளையில் தூங்கிய மகள்; தந்தை திட்டிய ஆத்திரத்தில் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் 12-ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தந்தை திட்டிய ஆத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-12-27 22:08 GMT

காசியாபாத்,

உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் இந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்வீர் சிங். இவருடைய மகள் காஜல் சிங் (வயது 17). 12-ம் வகுப்பு படித்து வந்த காஜல் நேற்று படிக்காமல் தூங்கி கொண்டு இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

இதனை பார்த்த அவருடைய தந்தை ஆத்திரமடைந்து உள்ளார். பள்ளி இறுதியாண்டில் உள்ள மகள், படிக்காமல் மதிய வேளையில் தூங்கி கொண்டு இருந்தது பற்றி அறிந்ததும் அவர் மகளை கடுமையாக திட்டியுள்ளார்.

இதனால், காஜலுக்கு வருத்தம் ஏற்பட்டதுடன் ஆத்திரமும் அடைந்துள்ளார். அவர் திடீரென அறைக்குள் சென்று கதவை பூட்டி விட்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து பதறிய ஜெய்வீர் சிங் மகளை மீட்டு, உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். எனினும், இதில் பலனின்றி அவர் முன்பே உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் கூறி விட்டனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்து வந்த போலீசார், காஜலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என உதவி காவல் ஆணையாளர் சுதந்திரா குமார் சிங் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்