மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்: மத்திய அரசு ஒப்புதல்

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பதற்கு இடம் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2024-12-28 10:31 GMT

புதுடெல்லி,

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் உயிரிழந்தார். உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இரவு 9.51 மணிக்கு காலமானார்.

இதையடுத்து மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து இன்று மன்மோகன் சிங்கின் உடல் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சீக்கிய முறைப்படி இறுதிச் சடங்கு நடைபெற்றது. பின்னர் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பதற்கு இடம் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பான தகவல் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்