வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-12-02 04:11 GMT

புதுடெல்லி,

வங்கக்கடலில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, 'பெஞ்சல்' என்ற பெயருடன் வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்தது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய 'பெஞ்சல்' புயல், இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், புதுச்சேரிக்கு அருகே நேற்று முன்தினம் இரவில் இருந்து 'பெஞ்சல்' புயல் நகராமல் அப்படியே நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேல் 'பெஞ்சல்' புயல் நிலப்பகுதியில் கரையேறியும் வலு குறையாமல் புதுச்சேரியில் நகராமல் நின்று புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் மழையை கொட்டித் தீர்த்தது. அந்த பகுதிகளில் எல்லாம் இதுவரை இல்லாத மழைப்பதிவாக அது பதிவானது. அதன்பின்னர், நேற்று காலை 11.30 மணிக்கு பிறகு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின்னர் இரவுக்குள் தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுவிழக்கும் என்றும் நாளை வடக்கு கேரளா- கர்நாடகா கடற்கரையில் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போச்சம்பள்ளியில் 25 செ.மீ. மழையும், திருவண்ணாமலையில் 22.2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு (12 முதல் 20 செ.மீ) வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்