டெல்லியில் கடும் தட்டுப்பாடு; தண்ணீர் தேடி தெருத்தெருவாக அலையும் மக்கள்

டெல்லியில் நாள் ஒன்றுக்கு 1,290 மில்லியன் கேலன்கள் தண்ணீர் தேவையாக உள்ள சூழலில், 969 மில்லியன் கேலன்கள் அளவுக்கே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.;

Update: 2024-06-03 04:27 GMT

புதுடெல்லி,

டெல்லியில் சில நாட்களாக வெப்ப நிலை கடுமையாக உயர்ந்து உள்ளது. 50 டிகிரி செல்சியசிற்கும் கூடுதலாக வெப்பநிலை உயர்ந்துள்ள சூழலில், வெப்ப அலையும் மக்களை வாட்டி வருகிறது. இதனால், பல்வேறு நோய்களுக்கும் அவர்கள் ஆளாகின்றனர்.

யமுனை ஆற்றில் நீர்மட்டமும் குறைந்து உள்ளது. நீர் தேவையும் மக்களிடையே அதிகரித்து உள்ளது. இதனால், நீரை வீணாக்கினால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது.

வடக்கு மற்றும் தென்மேற்கு டெல்லியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால், தண்ணீர் லாரிகளில் கொண்டு சென்று நீர் வழங்கப்படுகிறது. நகரத்தின் பல்வேறு பகுதிகளில் காலி குடங்கள், கேன்கள் உள்ளிட்டவற்றை தூக்கி கொண்டு மக்கள் தெருத்தெருவாக அலைகின்றனர்.

ஒரு சில இடங்களில் தண்ணீர் கருமையாகவும், துர்நாற்றம் வீசும் வகையிலும் உள்ளது. அதனால், குடிக்கவோ அல்லது சேமிக்கவோ, பிற தேவைகளுக்கு பயன்படுத்தவோ முடியவில்லை என மக்கள் கூறுகின்றனர்.

டெல்லியில் நாள் ஒன்றுக்கு 1,290 மில்லியன் கேலன்கள் தண்ணீர் தேவையாக உள்ளது. ஆனால், 969 மில்லியன் கேலன்கள் அளவுக்கே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், 321 மில்லியன் கேலன்கள் குறைவான நீர் விநியோகம் நடைபெறுகிறது. கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால், இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்