ரேணுகாசாமி கொலை வழக்கு; குற்றப்பத்திரிகை விவரங்களை வெளியிட ஊடகங்களுக்கு கோர்ட்டு தடை

ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை விவரங்களை வெளியிட ஊடகங்களுக்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

Update: 2024-09-10 16:19 GMT

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். நடிகர் தர்ஷனின் தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகாசாமி என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலமாக ஆபாச குறுந்தகவல், புகைப்படம் அனுப்பி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தனது தோழிக்கு தொல்லை கொடுத்ததால், நடிகர் தர்ஷன் ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு கடத்தி வரச்செய்து பட்டணகெரேயில் உள்ள கார்கள் நிறுத்தும் ஷெட்டில் அடைத்துவைத்து சித்ரவதை செய்துள்ளார். பின்னர் அவர்கள் ரேணுகாசாமியை கொலை செய்து, உடலை சாக்கடை கால்வாயில் வீசி இருந்தார்கள்.

இதுகுறித்து விசாரணை நடத்திய அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஒட்டுமொத்தமாக 17 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. முதல் குற்றவாளியாக பவித்ரா கவுடாவும், 2-வது குற்றவாளியாக நடிகர் தர்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணையின்போது கிடைத்த தகவல்கள் தொடர்பான விவரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி நடிகர் தர்ஷன் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 27-ந்தேதி கீழமை நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்த போதிலும், ஊடகங்கள் ரகசிய தகவல்களை பகிர்ந்து வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், மனுதாரரின் வாதங்களில் நியாயம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், அடுத்த விசாரணை நடைபெறும் வரை குற்றப்பத்திரிகை தொடர்பான எந்த விவரங்களையும் வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்