ராஜஸ்தான்: வெப்ப அலையால் 6 பேர் பலி; மக்களுக்கு மந்திரி எச்சரிக்கை

சூரிய வெப்பத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக, முன்னெச்சரிக்கையாக இருக்க, அறிவுறுத்தல் வழங்கும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளிடமும் ராஜஸ்தான் மந்திரி கிரோடி லால் மீனா கேட்டு கொண்டுள்ளார்.

Update: 2024-05-28 09:50 GMT

ஜெய்ப்பூர்,

நாடு முழுவதும் கோடையை முன்னிட்டு வெப்பநிலை பரவலாக அதிகரித்து காணப்படுகிறது. டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்ப அலை பரவல் அதிகரித்து உள்ளது.

ராஜஸ்தானில் பலோடி பகுதியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 49.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில், வெப்ப அலையால் ராஜஸ்தானில் 6 பேர் உயிரிழந்த சோகம் தெரிய வந்துள்ளது. அவர்களின் உடல்களுக்கு நடந்த பிரேத பரிசோதனை அறிக்கைகளின் முடிவில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

ஜெய்சல்மர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் இரவில் வெப்பநிலையானது, 7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. டெல்லி மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸிற்கு கூடுதலாக பதிவாகி இருந்தது.

மே 29-ந்தேதியில் இருந்து கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய கூடும்.

மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் மே 30-ந்தேதியில் இருந்து வெப்பநிலை குறைய கூடும். ஜூன் முதல் வாரத்தில் இருந்து பல பகுதிகளில் இயல்பான வெப்பநிலை பதிவாக கூடும் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ராதேஷியாம் சர்மா கூறியுள்ளார்.

ராஜஸ்தான் தவிர, பஞ்சாப், அரியானா-சண்டிகார்-டெல்லி, மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் உத்தர பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை சூழல் காணப்படும்.

இதுபற்றி ராஜஸ்தான் மந்திரி கிரோடி லால் மீனா கூறும்போது, சூரிய வெப்பத்தில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும்படியும், பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளிடமும் கேட்டு கொண்டுள்ளோம்.

முன்னெச்சரிக்கையாக இருக்கவும். வெப்பம் அதிகரித்து இருக்கும்போது, வெளியே செல்ல வேண்டாம். அவசியப்பட்டால் தவிர, வெளியே செல்ல வேண்டாம். வெப்ப அலையால் சிலர் உயிரிழந்து உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

வெப்பம் அல்லது குளிரால் ஒரு நபர் உயிரிழந்து விட்டால், மாநில பேரிடர் பொறுப்பு நிதியின் வழிகாட்டுதலின்கீழ் அவருக்கு பணம் வழங்க என பிரிவுகள் எதுவும் இல்லை. இடி, புயல் தருணத்தில் ஒருவர் மரணம் அடைய நேரிட்டால், அதற்காக பிரிவுகளை நாம் முன்பு உருவாக்கினோம். இந்த விவகாரம் பற்றி முதல்-மந்திரியிடம் பேசுவோம். அதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் உதவி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்