பாரா ஒலிம்பிக்கில் இரண்டாவது வெண்கலம் வென்ற பிரீத்திக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

பிரீத்தி பாலை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

Update: 2024-09-01 22:29 GMT

பாரீஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக பிரீத்தி பால் பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியிலும் வெண்கலம் வென்றிருந்தார்.

இந்த நிலையில் பாரா ஒலிம்பிக்கில் இரண்டாவது வெண்கலப் பதக்கம் வென்ற பிரீத்திக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், "பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் மகளிர் 200 மீ - டி35 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரீத்தி பாலுக்கு வாழ்த்துகள். 100 மீட்டர் வெண்கலப் பதக்கத்திற்குப் பிறகு, பாரா ஒலிம்பிக்கில் அவர் வென்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும், இது ஒரு விதிவிலக்கான சாதனையாகும்.

இந்தியாவுக்கான இரண்டு பாரா தடகளப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். அவரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. மூவர்ணக் கொடி போர்த்தி அவர் எடுத்த புகைப்படங்கள் விளையாட்டு பிரியர்களை மின்னச் செய்தன. அவர் இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை வலுப்படுத்தி, இந்தியாவுக்காக அதிக பாராட்டுகளை வெல்வார்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "பாரா ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீ டி35 போட்டியில் வெண்கலம் வென்று, ஒரே தொடரில் இரண்டாவது பதக்கம் பெற்று, பிரீத்தி பால் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் இந்திய மக்களுக்கு ஒரு உத்வேகம். அவருடைய அர்ப்பணிப்பு உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்