23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி

அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ஆம் தேதி உக்ரைனுக்கு செல்கிறார்.

Update: 2024-08-19 14:43 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ரஷியா-உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ம் தேதி உக்ரைன் செல்கிறார். கடந்த மாதம் பிரதமர் மோடி ரஷியா சென்றிருந்தது, ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ரஷிய போர் தொடங்கியதற்கு பின்னர் முதல்முறையாக அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ம் தேதி உக்ரைனுக்கு செல்கிறார்.

முதலில் வரும் 21ம் தேதி போலந்துக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இரண்டு நாட்களுக்குப் பிறகு 23ம் தேதி போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு செயலாளர் தன்மயா லால், "உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இந்த வார இறுதியில் (வெள்ளிக்கிழமை, 23ம் தேதி) உக்ரைனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுப் பயணமாகும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த பயணம், இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயான சமீபத்திய உயர்மட்ட தொடர்புகளின் அடிப்படையில் அமையும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, போருக்கான தீர்வு பேச்சுவார்த்தைதான் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்