மோடியுடன் தொலைபேசியில் பேசிய இந்தோனேசிய ஜனாதிபதி: பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம் இறுதியாகிறது

இந்தியா- இந்தோனேசியா நாடுகளுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து பேசியதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

Update: 2024-06-20 11:23 GMT

புதுடெல்லி:

இந்தோனேசியாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபோவோ சுபியாண்டோ இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசினர்.

இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தோனேசிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோ தொலைபேசியில் அழைத்து பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஜனாதிபதி பதவியில் சிறப்பாக செயல்பட வாழ்த்தியதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே நமது நாகரிக உறவுகளை அடிப்படையாக கொண்ட நல்லுறவை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தோனேசியா திட்டமிட்டுள்ள நிலையில், இரு தலைவர்களிடையே நடந்த இன்றைய உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை தொடர்பான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தயாரித்துள்ள அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணை சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிடம் இருந்து இந்த ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தோனேசியா ஆர்வம் காட்டி வருகிறது.

இந்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்,டி.ஓ.) மற்றும் ரஷியாவின் ராக்கெட் வடிவமைப்பு நிறுவனமான (என்.பி.ஓ.எம்) ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 1998-ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான பிரம்மோஸ், கரையில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள எதிரி கப்பல்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்