பாஜக ஆட்சியை தேர்ந்தெடுக்க அரியானா பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர் - அனுராக் தாக்கூர்

90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.;

Update:2024-10-03 10:58 IST

சண்டிகார்,

90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன. எனவே இங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது. அரியானா தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தல் குறித்து பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் கூறுகையில், "அரியானாவில் பாஜக ஆட்சியை தேர்ந்தெடுக்க அரியானா பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். மக்கள் 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் அரியானாவில் 3வது முறையாக பாஜக ஆட்சியை அமைப்பார்கள்.

மேலும், இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசு பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கிறேன். அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை ஏன் அமல்படுத்தவில்லை? விவசாயிகளின் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்ட போது பூபிந்தர் சிங் ஹூடா ஏன் அவர்களுக்கு நீதி வழங்கவில்லை? கர்நாடாகாவில் 1,200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன்? அப்போது ஏன் அவர்கள் விவசாயிகளின் வீடுகளுக்கு செல்லவில்லை?" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்