'கட்சியை விட்டுச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள மாட்டோம்' - உத்தவ் தாக்கரே, சரத் பவார் திட்டவட்டம்

கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள மாட்டோம் என உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Update: 2024-06-15 15:55 GMT

Image Courtesy : ANI

மும்பை,

கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பிரிந்து சென்றதால் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டது. பின்னர் பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரி ஆனார். அதே போல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்றதால் அக்கட்சி இரண்டாக உடைந்தது.

இதனிடையே சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து 'மகாவிகாஸ் அகாடி' என்ற கூட்டணியை அமைத்து நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொண்டன. இந்த கூட்டணி மராட்டிய மாநிலத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இதன்படி மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) 9 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதே சமயம் பா.ஜ.க. 9 தொகுதிகளிலும், சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே அணி) 7 தொகுதிகளிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணிக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலர் மீண்டும் தங்கள் பழைய கட்சிகளில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதல் முறையாக உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, "கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்