என் கணவர் ஒடிசா முதல்-மந்திரியாவார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை - மோகன் சரண் மாஜியின் மனைவி

மாநில மக்களுக்காக நிச்சயம் பாடுபடுவார் என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் மாஜியின் மனைவி பிரியங்கா தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-12 10:57 GMT

புவனேஸ்வர்,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம், பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே களம் கண்டன. இதில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 78 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா அமோக வெற்றிப் பெற்றது. இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை அக்கட்சி பெற்றது. ஒடிசாவில் பா.ஜனதா முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில், ஒடிசாவின் புதிய முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி நெகிழ்ச்சி அடைந்துள்ளார். மத்திய மந்திரிகள் தலைமையில் ஒடிசா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட மோகனின் மனைவி பிரியங்கா கூறுகையில்,

புவனேஸ்வரில் உள்ள அரசு குடியிருப்பில் மோகனின் தாய் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகின்றோம். புதிய முதல்-மந்திரியாக மாஜிஅறிவிக்கப்பட்டபோது நாங்கள் அனைவரும் ஆச்சரியத்தில் திளைத்தோம். உள்ளூர் செய்திகளின் மூலம் அவர் முதல்-மந்திரியாக பதவி உயர்த்தப்பட்டதை நாங்கள் அறிந்தோம்.

அந்த நிமிடம் வரை முதல்-மந்திரியாவார் என நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. புதிய ஒடிசா மந்திரிசபையில் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தனது கணவர் மாநில மக்களுக்கும், தனது சொந்த தொகுதியான கியோஞ்சார் மக்களுக்கும் நிச்சயம் பாடுபடுவார் என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மோகனின் தாயார் பலே மாஜி கூறுகையில், தனது மகன் முதல்-மந்திரியானதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞராக இருந்தபோதே மக்களுக்கு சேவை செய்ய முன்வந்தார். முதலில் கிராம தலைவரானார். பின்னர் எம்.எல்.ஏ.வானார். தற்போது முதல்-மந்திரியாக உயர்ந்துள்ளார் என்று அவர் கூறினார். எனது தந்தை முதல்-மந்திரியானது எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என அவரது மகன் தெரிவித்தார்.

முதல்-மந்திரியாக மாஜியின் பெயர் அறிவிக்கப்பட்டதையடுத்து, கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ராய்காலாவில் மக்கள் கொண்டாட்டத்தை தொடங்கினர். இதற்கிடையில், மாஜியின் ஆதரவாளர்களும் நலன்விரும்பிகளும் புவனேஸ்வரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்